கோவை டாஸ்மாக் சூப்பர்வைசர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-03 05:46 GMT

அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் மேற்பார்வையாளராக இருப்பவர் முத்துபாலன். இவரது வீடு கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ளது.

இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு காரில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் நுழைவுவாயிலை பூட்டி விட்டு உள்ளே சென்றனர். மேலும் வீடுகளின் கதவுகளும் அடைக்கப்பட்டது.

பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று, அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அமலாக்கத்துறையினர் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு 10 பேர் அதிவிரைவுப் படையினர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீட்டின் முன்பு யாரும் கூடிவிடாத வகையிலும், உள்ளே யாரும் நுழையாத வண்ணமும் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கோவையில் முதல் முறையாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவது இங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News