கோவை மக்களவை தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திமுக! நோக்கம் என்ன?

வலுவான திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டு, கோவையில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதன் நோக்கம் என்ன?;

Update: 2024-03-15 05:48 GMT

தொழில், கல்வி, மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கும் கோவை, மேற்கு மண்டலத்தின் தலைநகராகக் கருதப்படுகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மேற்கு மண்டலம் அதிமுகவுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. சட்டப் பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுக்கு பலம் சேர்க்கும் பகுதியாக இருந்தாலும் கோவை தொகுதியை அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கே கொடுத்து வந்தது.

2014 மக்களவைத் தேர்தலில்தான் அதிமுக முதல் முறையாக கோவையில் நேரடியாகப் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் மற்ற தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் கோவையில் மட்டும் வெறும் 42,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக வேட்பாளர் பி.நாகராஜன் வென்றார்.

இதற்குக் காரணம் பாஜகவின் செல்வாக்கு. பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளர் கே.கணேஷ்குமாரால் மூன்றாமிடத்தையே பிடிக்க முடிந்தது.

கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருந்த கோவை தொகுதியில் இந்த முறை தானே போட்டியிட முடிவு செய்துள்ளது திமுக. தொகுதிப் பங்கீட்டில் திண்டுக்கல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுத்துவிட்டு, கோவையை வலியப் பெற்றிருப்பதால் திமுகவின் நோக்கம் என்ன என்பது குறித்த பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தாலும், 1996க்குப் பிறகு பாஜக குறிப்பிடத்தக்க அளவில் இங்கு வளர்ச்சி பெற்று கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை பாஜகவின் வானதி சீனிவாசன் கோவை தெற்குத் தொகுதியில் தோற்கடித்தார். திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

அது மட்டுமல்ல, அந்தத் தேர்தலில் ஆட்சியை திமுக கைப்பற்றினாலும் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வென்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் 10இல் 9 இடங்களை அதிமுகவே வென்றது.

இதனை வைத்து கோவை மக்களவைத் தொகுதி திமுகவால் காலூன்ற முடியாத இடம் என்றும் சொல்லிவிட முடியாது. கடந்த 1980 (இரா.மோகன்), 1996 (எம்.ராமநாதன்) மக்களவைத் தேர்தல்களில் திமுக நேரடியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் 1998, 2014 தேர்தல்களில் திமுக போட்டியிட்டுத் தோல்வி அடைந்துள்ளது.

இந்த வரலாற்றை மாற்றுவதற்காகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து இந்தத் தொகுதியை திமுக வலியுறுத்திப் பெற்றிருக்கிறது என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில் கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்ற திண்டுக்கல் தொகுதியை, உறுதியாக வெற்றிபெறக் கூடிய தொகுதி என்று சொல்லி மார்க்சிஸ்டுகளிடம் திமுக கொடுத்திருப்பது, பாஜகவை நேரடியாக எதிர்த்து மேற்கு மண்டலத்தில் (கோவை) வலுவாகக் கால் பதிக்க வேண்டும் என்ற திட்டத்துடன்தான் என்கின்றனர்.

அதேநேரம் தமிழக பாஜகவின் நம்பிக்கைக்கு உரிய தொகுதியாக கோவை உள்ளது. எனவே, இந்தத் தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு நடைபெற்ற பல்லடம், கோவை தொகுதியில்தான் உள்ளது. அந்த மாநாட்டுக்கு திரண்ட கூட்டம் பாஜகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதால் அண்ணாமலைதான் இங்கு போட்டியிடுவார் என்கின்றனர் பாஜகவினர்.

அதனால் பாஜக வலுவாக இருக்கும் இடத்திலேயே, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரைத் தோற்கடித்து, 2026 தேர்தலின்போது அவர் நம்பிக்கையளிக்கும் தலைவராக இருப்பார் எனக் கூறப்படுவதை பொய்யாக்க திமுக திட்டமிட்டிருக்கிறது.

கோவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் எம்எல்ஏவும் தற்போதைய மாநகர் மாவட்டச் செயலருமான கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் மனு கொடுத்திருக்கின்றனர்.

அதேபோல, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன், 2014 தேர்தலில் போட்டியிட்ட கணேஷ்குமார், வழக்குரைஞர் அருள்மொழி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மருமகன் டாக்டர் கோகுல் ஆகியோரும் மனு அளித்துள்ளனர்.

அதேநேரம் கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதிகளை தன்வசம் கொண்டிருக்கும் அதிமுகவும் இந்தத் தொகுதியை எளிதில் விடுவதாக இல்லை என்பதால் அவர்களும் வலுவான வேட்பாளரைத் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மூன்று முக்கிய கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகளால் கோவை மக்களவைத் தொகுதி இப்போதே பரபரப்படைந்திருக்கிறது .

Tags:    

Similar News