ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்த முடியும்.. டிடிவி தினகரன் பேட்டி

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்த முடியும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.;

Update: 2022-12-14 12:10 GMT

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை ஒலம்பஸ் பகுதியில் அமமுக சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு, கேக் வெட்டி கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, அமமுக ஆரம்பித்த போது விமர்சித்தவர்கள் இன்று அதை உணர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு சிலர் சுயநலத்தால் பெரிய கடலாக இருந்த அதிமுக கட்சியை ஒரு குட்டையை போல் மாற்றி உள்ளார்கள். ஆட்சி அதிகாரத்தால், பதவி வெறியால், சுயநலத்தால் அவர்களும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்ததால், மக்கள் விரக்தியடைந்து திமுக திருந்தி விட்டது என மக்கள் வாக்களித்து விட்டார்கள்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரட்டை தலைமை என்ற பெயரில் இரட்டை இலையை காட்டி தமிழக மக்களை ஏமாற்றியவர்கள் தற்போது ஆளுக்கு ஒருபக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வந்தால் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்கான நிலையில் யாரும் இல்லை.

நீதிமன்றம் நினைத்தால் அந்த சின்னத்தை தரமுடியும், கடந்த காலத்தில் ஏற்பட்ட சண்டையால் நீதிமன்றத்தின் கருணைக்காக காத்திருக்கும் நிலையில் வைத்து இருக்கிறார்கள். வழக்குகளில் மாட்டிவிடுவோம் என்ற பயத்தில் கேடயமாக இந்த கட்சியை பயன்படுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் திமுகவை எதிரக்க முடியும். அதற்கான காலம் விரைவில் வரும். சுயநலவாதிகள் செய்த தவறுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். கடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியாமல் இருக்கலாம். ஆனால், வருங்காலத்தில் நமது லட்சியம் வெல்லும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அமமுகவில்தான் இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆட்சியை ஏன் திமுகவிற்கு அளித்தோம் என்ற வருத்தத்தில் மக்கள் இருப்பதுதான் உண்மை. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலினை அவசர கதியால் அமைச்சராக்கியது ஏன்? என தமிழகம் பொதுமக்கள் பலரும் பேசி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். சுயநலத்தாலும் பதவி வெறியாலும் ஒரு வட்டாரக் கட்சியாகவும், ஒரு சமூகத்திற்கு மட்டுமான கட்சியாகவும் அதிமுகவை சிலர் மாற்றி உள்ளனர். அதை எல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து ஜெயலலிதாவின் ஆட்சியை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரும்.

மேலும், தங்கள் மீது வழக்கு வந்து விடுமோ? என்ற அச்சத்தினால், தாங்கள் இருக்கின்றோம் என்பதை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதாலும் தான் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே தவிர, மக்களின் மீது உள்ள எண்ணம் எல்லாம் கிடையாது.

வாய்ப்பு கிடைத்தால் பன்னீர்செல்வத்தை சந்திப்பேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் திமுகவை வீழ்த்த முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Tags:    

Similar News