வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை
வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் குழப்பங்கள் தீர்ந்து இயல்பு நிலை திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. முதலாவர் மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு பின் பிரச்னைகள் தீர்ந்து இயல்புநிலை திரும்பி உள்ளது.
வெளி மாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை அதிகாரிகள் வடமாநிலத்தவர்கள் இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வடமாநில தொழிலாளர்களின் அச்சம் தற்போது போக்கப்பட்டு உள்ளது.
வதந்தி பரப்புவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விபத்து போன்ற வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படட்டு வருகின்றன. அது தொடர்பான புலன்விசாரணையின் இறுதியில் யாரெல்லாம் வதந்தி பரப்புகிறார்கள் என்ற விவரம் தெரியவரும்.
பிரச்னைகளை உருவாக்கும் பொருட்டு வீடியோக்கள் பரப்பிய விவகாரத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் மூலம் நடக்கக்கூடிய முறைகேடுகளை விழிப்புணர்வுடன் தடுக்க வேண்டும். மொபைல் போனில் வரக்கூடிய லிங்குகளை உபயோகிப்பதில் பயனாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தொடர்ந்து, கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திபோது, வட மாநில தொழிலாளர்கள் இடையே இருக்கக்கூடிய அச்சத்தை போக்குவது குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.