கோவையில் புதிய காவல்நிலையங்கள்: 26-ம் தேதி திறப்பு

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 26-ம் தேதி கோவை வந்து புதிய காவல் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்

Update: 2023-05-20 10:59 GMT

காட்சி படம் 

கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன.

இந்தநிலையில், கோவை மாநகரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்கவும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பை அதிகமாக்கி ரோந்து பணியை மேற்கொள்ள 3 காவல் நிலையங்கள் அமைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் என 3 புதிய காவல் காவல் நிலையங்களுக்கான காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், 5 சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள், உட்பட 25 பேர் காவல்துறையினர், கரும்பு கடை காவல் நிலையத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், 7 சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 25 பேர் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் 2 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 11 சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட 25 பேர் என காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இது குறித்து கோவை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கரும்புக்கடை காவல் நிலையம் ஆயிஷா மஹால் அருகேயும், கவுண்டம்பாளையத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய 3 காவல் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன.

இதனைத் தொடர்ந்து வருகிற 26ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய காவல் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் என கூறினார்

Tags:    

Similar News