கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் 4 புதிய நெல் ரகங்கள் அறிமுகம்
கோவை வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் 4 புதிய நெல் ரகம் உள்பட 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது;
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் 23 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 கல்லூரி, 40 ஆராய்ச்சி நிலையங்கள், 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய பயிர் ரகங்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு வேளாண் பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வன மரப்பயிர்கள் என 23 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பயிர் ரகங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் புதிய ரகங்கள் வெளியீட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டது ஆகும். 23 ரக புதிய பயிர்களில் 4 புதிய நெல் ரகங்கள் உள்பட 16 வேளாண் பயிர் ரகங்களும் உள்ளது.
மேலும் சிறு தானிய பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்கவும், உட்கொள்ளும் அளவினை அதிகரிக்கவும் 4 புதிய சிறுதானிய ரகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறுதானிய பயிர்களில் இரும்பு சத்து, துத்தநாக சத்து அதிகளவில் இருக்கும்.
பயறு வகைகளில் 3 ரகங்களும், எண்ணெய் வித்துப்பயிர்களில் 2 ரகங்களும், மக்காச்சோளம், கரும்பு மற்றும் பசுந்தாள் உரப்பயிரான சணப்பையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர்களில், காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பீர்க்கை மற்றும் கொத்து அவரையில் தலா ஒரு ரகமும், மலர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில் மார்கழி மல்லி என்ற மலர் ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் மக்காச் சோளத்தில் இருந்த படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் தாக்குதல் தொடர்பாக தஞ்சாவூர், ஆழியார் பகுதியில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் ஆய்வு நடக்கிறது.
அத்துடன் மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கோடு வனப்பயிர்களில் சுமார் 4 புதிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 10 புதிய தொழில்நுட்பங்களும், 6 புதிய பண்ணை இயந்திரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பத்தில் கிராமங்களில் நிலவும் காலநிலை குறித்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாடித்தோட்டம் அமைக்க ஊக்குவிக்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு காலியாக உள்ள 1400 இடங்களுக்கான உடனடி சேர்க்கை வருகிற 20-ம் தேதி நடக்கிறது. வேளாண் பல்கலைக்கழகம் பயில விண்ணப்பித்து இருந்தவர்களும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றில் சேர இயலாதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் 16-ம் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் முழுமையான தகவல்கள் பதிவேற்றப்படும். இது குறித்த சந்தேகங்களை 0422 6611345 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம் எனவும் தெரிவித்தார்.