புகார் அளித்தும் பயனில்லை: துடைப்பத்தை கையில் எடுத்தார் பெண் கவுன்சிலர்

கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் தூய்மை பணி மேற்கொள்ளப்படாததால்,பெண் கவுன்சிலர் தானே களத்தில் இறங்கினார்.;

Update: 2023-04-17 15:11 GMT

கோவையில் மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர் களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை என அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, மாநகராட்சி அ.தி.மு.க.வைச் சேர்ந்த 38 ஆவது வார்டு கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

பலமுறை புகார் தெரிவித்தும் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கவுன்சிலர் ஷர்மிளா தானே களத்தில் இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார். அதன்படி முதற்கட்டமாக வடவள்ளி பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான க்ரியோ கார்டன் பூங்காவில் அவர் பணியை தொடங்கினார்.


புதர்களாக காட்சியளித்த க்ரியோ கார்டன் பூங்காவில் சுத்தம் செய்யும் வகையில் பெண் கவுன்சிலர் ஷர்மிளா புதர்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதனை அறிந்த அந்தப் பகுதி மக்கள் சிலர் கவுன்சிலருடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கப்படாததால் அங்கு இருக்கும் பொருட்கள் திருடு போய்விட்டதோடு மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளதாகவும் கவுன்சிலர் ஷர்மிளா சந்திரசேகர் தெரிவித்தார். மாநகராட்சி நிர்வாகத்திடம் நடவடிக்கை கேட்டு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பெண் கவுன்சிலர் ஒருவர் களத்தில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News