சூலூர் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க ஆட்சியர் கிரந்திகுமார் வலியுறுத்தல்
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கிரந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். தொடர்ந்து ஊராட்சியில் சிறப்பாக செயலாற்றிய காவலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பேசுகையில், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கிராமத்துக்கான ஒதுக்கீடு அதிகரித்து உள்ளது. இதற்கான சவால்களும் அதிகமாக உள்ளன. இருந்தபோதிலும் அதை நோக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கோவையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரை சேமிக்க ஏதுவாக மழைநீர் பாதுகாப்பு திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் கட்டிடமாக இருந்தாலும் அரசு கட்டிடமாக இருந்தாலும் மழை நீரை கட்டாயம் சேமிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திடக்கழிவு மேலாண்மையை பொருத்தவரை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து குப்பைகளை அகற்றி வருகிறோம். இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கண்டிப்பாக கிசான் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் அவர்களுக்கு பயிர் கடன் வாங்குவதற்கான பல்வேறு பயன்கள் கிடைக்கும். மேலும் எந்தவிதமான அடமானமும் இன்றி ரூ.60 ஆயிரம் வரை கடன் பெற இயலும் என்று கூறினார்
நிகழ்ச்சியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.