கோவையில் தனியார் பள்ளி வாகனங்களை அதிரடி ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்த பள்ளி வாகனங்கள் ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் பார்வையிட்டனர்.;

Update: 2023-05-30 12:27 GMT

பள்ளி வாகன ஆய்வை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் 

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகி ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

கோவையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் விபத்துகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் செய்யும் பணி இன்று நடந்தது.

கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்த இந்த ஆய்வு பணியை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வில் கோவையில் உள்ள 230-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1355 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி, சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா? படிக்கட்டுகள் குறைந்த உயரத்தில் உள்ளதா? முதலுதவி பெட்டி, மற்றும் டிரைவரின் பணி அனுபவம், வாகனம் ஓட்டுவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட 17 அம்சங்கள் கொண்ட வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

மேலும் ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை, உடல் பரிசோதனையும் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறையின் சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவையில் உள்ள அனைத்து தனியார் பஸ்களிலும் கட்டாயம் கண்காணிப்பு காமிராக்கள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் போன்றவைகள் வைத்திருக்க வேண்டும்.

மேலும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் பள்ளி நேரத்தை குறித்து வாகனங்களை சரியாக இயக்க வேண்டும்.

மேலும் அவசர நிலையில் இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது தான் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே ஓட்டுநர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் அந்தந்த கல்வி நிறுவனங்களில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் அவ்வப்பொழுது வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை உடன சரி செய்து விட வேண்டும்.

இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் 3 குழந்தைகள் மற்றும் 4 குழந்தைகளை இருசக்கர வாகனங்களில்ஏற்றி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து நடக்கின்றது.

எனவே குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். மேலும் பள்ளி கல்லூரி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் பள்ளி மாணவ,மாணவிகளிடம் பொறுப்பாக முறையாக பேச வேண்டும். நீங்கள் பேசும்வார்த்தைகளில் தான் அவர்களது எண்ணமும் மற்றும் வாகனங்களில் பயணிக்கும மாணவர்களின் பாதுகாப்பு அடங்கி உள்ளது. எனவே ஓட்டுநர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் முறையாக பேச வேண்டும் என கூறினார்

Tags:    

Similar News