கோவையில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி ரூ.3.50 கோடி மோசடி.. 11 வாகனங்கள் பறிமுதல்…

கோவையில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி மூன்றரை கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-02-13 13:41 GMT

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பார்வையிட்டார்.

கோவையில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி பலரிடம் கார்களை வாங்கி மூன்றரை கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பா ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், 11 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேனியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விஜிஎம் டிராவல்ஸ் என்ற பெயரில் போலியாக டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் துவங்கினார். அதன் அடிப்படையில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம் மாத வாடகைக்கு கார் எடுத்து மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாக பொய்யான தகவல் கூறி 30-க்கும் மேற்பட்ட கார்களை வாங்கி உள்ளார். பின்னர் அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக காரின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வெங்கடேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 11 கார்கள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் 19 கார்கள் விரைவில் மீட்கப்படும்.

வாடிக்கையாளர்களின் கார்களை வாங்கி அந்தக் கார்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களுக்கு விற்று வெங்கடேஷ் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது அவரை கைது செய்துள்ள நிலையில் பல்வேறு தகவல்கள் கிடைத்து வருகிறது.


மேலும், கோவை மாநகரில் அடுத்தடுத்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகள் வெளியூர்களுக்கு தப்பி செல்லாமல் இருக்க மாவட்ட எல்லையோரத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

கோவை குண்டு வெடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், மாவட்டம் முழுவதும் 34 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ஏற்கெனவே உள்ள போலீஸாருடன் ஆயிரம் போலீஸார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மகா சிவராத்திரி விழா வருகிற 18 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயில்களில் மக்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

வடமாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா சாக்லெட்கள் கொண்டு வருவது தெரியவந்துள்ளது. கான்பூரில் கஞ்சா சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. அதனை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News