கோவை கொலை சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது போலீஸார் துப்பாக்கி சூடு..
கோவை கொலை சம்பவத்தில் தொடர்புடைய இருவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.;
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு வெளியே வந்த கோகுல் என்ற இளைஞர் 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த மனோஜ் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை அமைத்து கோவை மாநகர காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஜோஸ்வா, கௌதம், ஹரி, பரணி சௌந்தர், அருண்குமார், சூர்யா, டேனியல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோத்தகிரி பகுதியில் கைது செய்யப்பட்ட அவர்களை கோவை அழைத்து வந்தபோது மேட்டுப்பாளையம் இருவர் யூசுப் என்ற உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், காவல்துறையினர் அவர்களை சுட்டுப் பிடித்து உள்ளனர். இதில் இருவரின் தொடை பகுதியிலும் குண்டு பாய்ந்து உள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் குன்னூரில் இருப்பதாக தகவல் கிடைத்தை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்றபோது அங்கிருந்து ஊட்டிக்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது.
அவர்களைப் பின் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினரும் ஊட்டிக்குச் சென்றனர். காவல்துறையினர் வருவதை அறிந்து கொண்ட குற்றவாளிகள் இருசக்கர வாகனங்கள் மூலம் கோத்தகிரி வழியாக தப்பிச் செல்ல முயன்றன. அந்த தகவல் நீலகிரி மாவட்ட காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குள் இருந்த குற்றவாளிகள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கோத்தகிரியில் இருந்து குற்றவாளிகளை கோவை அழைத்து வந்த போது இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டும் என சிலர் கேட்டதால் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வனக்கல்லூரி அருகே வாகனம் நிறுத்தப்பட்டது.
அப்போது அவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை எடுத்து யூசுப் என்கிற உதவி ஆய்வாளரை தாக்கி தப்பியோடினர். அப்போது, தற்காப்புக்காக காவல் துறையினர் அவர்களை சுட்டு பிடித்ததில் ஜோஸ்வா, கௌதம் என்கிற இருவருக்கும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.
காயம் ஏற்பட்ட இருவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகளின் கீழ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.