கோவை கிரைம் செய்திகள்: கோவையில் நடைபெற்ற பணம் கொள்ளை சம்பவங்கள்

கோயம்புத்தூரில் நடைபெற்ற பல்வேறு பணம் கொள்ளை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள்

Update: 2023-06-15 10:40 GMT

கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது50). ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நண்பரான கண்ணன் என்பவருக்கு கொடுப்பதற்காக காரில் புறப்பட்டார்.

இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. ஈஸ்வரமூர்த்தி சாப்பிட சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தைத் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர் பணத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

மொபெட்டில் வைத்திருந்த பணம் அபேஸ்

கோவை ஒண்டிப்புதூர் கிருஷ்ணன் நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (63). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு தனது மொபட்டில் சென்றார்.

வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு வெளியில் வந்த அவர் பணத்தை மொபட்டில் உள்ள சீட்டுக்கு அடிப்பகுதியில் வைத்தார். இதனைத் தொடர்ந்து தேவராஜ் மொபட்டில் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார்.

மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்திவிட்டு வங்கியினுள் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது, வண்டியில் வைத்திருந்த பணம் மாயமாகி இருந்தது. இவர் வங்கிக்குள் சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர் வண்டியில் இருந்த பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி. இவரது மனைவி மசக்காரணி (50). இவர் ராஜ வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் முகவரி கேட்கவே, அப்போது மசக்காரணி முகவரியை கூறிக்கொண்டிருந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மசக்காரணி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து அவர் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையைத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News