கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு மாதிரி நினைவுத் தூணுடன் வந்த இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்…
கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத் தூண் அமைக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளிக்கப்பட்டது.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில், போலீஸார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியை முன்னிட்டு, கோவை மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் ஸ்கேன் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலமாக ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.
இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் மனு:
இந்த நிலையில், இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில், நிர்வாகிகள் சிலர் கையில் நினைவுத் தூண் மாதிரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 58 பேருக்கு நினைவு தூண் அமைத்திட வேண்டும் என பல முறை வலியுறுத்து உள்ளோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி தூண் மற்றும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி மனு அளித்துள்ளோம்.
தற்போதைய தமிழக அரசு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யாமல் இருப்பதற்கு தங்கள் இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என மணிகண்டன் தெரிவித்தார்.