கோவை குண்டு வெடிப்பு தினம்: பாதுகாப்பு பணியில் 3000 போலீஸார்!

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.;

Update: 2023-02-13 12:13 GMT

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை போலீஸார் சோதனை செய்தனர்.

உலகையே உலுக்கும் விதமாக, கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.

கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில், போலீஸார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களிலும் சோதனையை தீவிரப்படுத்துவது வழக்கம்.


இந்த நிலையில் குண்டு வெடிப்பு தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியை முன்னிட்டு, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் ஸ்கேன் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

இதே போல் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் உடமைகளையும், வெடி பொருடள்கள் மற்றும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் மூலமாக ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.மேலும், மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த பாதுகாப்பு குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், அசம்பாவித சம்பவங்களை தடுக்க இரண்டு டிஐஜி, நான்கு காவல் கண்காணிப்பாளர்கள், 18 உதவி ஆணையர்கள் 225 கமெண்டோ போலீஸார் உள்ளிட்ட 3000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News