கோவையில் கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
திருட்டு சம்பவங்களை தடுக்க கடைவீதிகளில் 3 ஆயிரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இறுதிக்கட்டமாக இன்று புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர்.
கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான ஜவுளிக் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே கோவையில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் ஏராளமான பொதுமக்கள் கடைவீதி களில் திரண்டு புத்தாடைகளை வாங்கினர். காலை முதலே கடைகளில் மக்கள் குவியத் தொடங்கினர்.
இதனால் ஜவுளிக்கடை கள், இனிப்பு, பட்டாசு, நகைக்கடைகள் முன் கூட்டியே திறக்கப்பட்டு விற்பனையை தொடங்கின. ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட அனைத்து கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதனால் கடைவீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாகவே காட்சியளித்தது. மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதால், கடைவீதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக ஒப்பணக்கார வீதி, ராஜவீதி சந்திப்பு, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டு பொதுமக்களிடம் தங்கள் உடமைகளை பத்திரமாக வைத்து கொள்ள அறிவுறுத்துவதுடன், கவனமாக இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் காவல்துறையினர் சாதாரண உடை அணிந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்கும் என்பதால் அனைத்து கடை வீதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு காமிரா மூலம் கடைவீதிகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதுதவிர கடைவீதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரியும் நபர்கள் கண்காணிக்கப்பட்டனர். கோவையில் தீபாவளி பண்டிகையொ ட்டி 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைவீதிகளில் ஜவுளி எடுக்க மக்கள் குவிந்துள்ளதால், மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே செல்ல வேண்டியிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.
காவல்துறையினர் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.