நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவையில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர்

வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பேருந்து நிலையம் முழுவதும் தீவிர சோதனை . ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.;

Update: 2023-12-05 12:37 GMT

ரயில் பயணிகளின் உடமைகள் சோதனையிடப்படும் காட்சி 

ஆண்டுதோறும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறதுஇதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோவை மாவட்டத்திலும் பாபர் மசூதி தினத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் 1,200 காவலர்கள் புறநகரில் 800 காவல்துறையினர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காந்திபுரம் நகர பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உக்கடம், சூலூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, அன்னூர், வால்பாறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

பேருந்துகளிலும் ஏறி அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பேருந்து நிலையம் முழுவதும் தீவிர சோதனையும் மேற்கொண்டனர். மக்கள் வைத்திருந்த பைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இதேபோல் மக்கள் அதிக நடமாட்டம் இருக்க கூடிய மார்க்கெட்டுகள், கடைவீதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை சந்திப்பு ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே காவல்துறை மற்றும் மாநகர காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் ரயில்வே தண்டவாளங்களிலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் கருவிகளை கொண்டு சோதனை செய்தனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களின் உடமைகளும் சோதனையிடப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை உக்கடம் பகுதியில் போராட்டமும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News