தென்மேற்கு பருவமழை சராசரியாக பொழியும்: கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு
ஆண்டு தோறும் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.;
கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொட்டித் தீர்க்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-
எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன.
இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023-ம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.