சபரிமலை சீசன் தொடக்கம். மீன் கடைகளில் குறைந்தது விற்பனை
கார்த்திகை மாதப்பிறப்பை தொடர்ந்து இறைச்சியின் விலைகளும் பெருமளவில் குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி;
கோவை உக்கடம் லாரிப்பேட்டையில் ஒட்டுமொத்த மீன் விற்பனை சந்தை இயங்கி வருகிறது. மேலும் உக்கடம் பேரூர் பிரதான சாலையில் சில்லரை மீன்சந்தைகள் உள்ளன.
கோவையில் உள்ள மீன்சந்தைகளுக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் கேரளாவில் உள்ள கொச்சி, சாவக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் 15 டன்கள் வரை மீன்வகைகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.
இங்கு அவை தரம் பிரிக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏலம் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உக்கடம் லாரிப்பேட்டை, உக்கடம் பேரூர் பிரதான சாலையில் உள்ள மீன் விற்பனை சந்தைகளில் 24 மணி நேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
மேலும் சனி, ஞாயிறு ஆகிய வாரவிடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் திரண்டு வந்திருந்து தங்களுக்கு பிடித்த மீன்வகைகளை வாங்கி செல்வர்.
இந்தநிலையில் கார்த்திகை மாதம் பிறந்தது. தொடர்ந்து சபரிமலைக்கு பக்தர்கள் துளசிமாலை அணிந்து 48 நாட்கள் விரதம் அனுசரித்து வருகின்றனர். மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை. மேலும் குடும்பத்தினரும் பூஜை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதால் சைவ உணவுகளையே விரும்பி உட்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலானோர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் அனுசரித்து வருவதால் இங்கு உள்ள இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் பெரியஅளவில் இல்லை. இதனால் அங்குள்ள பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் விற்பனை கடைகளில் உள்ள மீன் வகைகளின் விலையும் கணிசமானஅளவு குறைந்து உள்ளது.
கோவை உக்கடம் மீன் சந்தைகளில் விற்கப்படும் ஒரு கிலோ மீன் வகைகளின் விலை விவரம் (அடைப்புக்கு றிக்குள் பழைய விலை):
வஞ்சிரம்-700 (900), வாவல்-500 (600), கருப்பு வாவல்-300 (400), பாறை மீன்-200, ஊழி-100, மத்தி-100, நெத்திலி-150, சங்கரா-180, செம்மீன்-300 என்ற விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கார்த்திகை மாதப்பிறப்பை தொடர்ந்து இறைச்சியின் விலைகளும் பெருமளவில் குறைந்து உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கறி ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது தற்போது ஒரு கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆட்டு இறைச்சியின் விலை ஒரு கிலோ ரூ.800 என விற்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மீன், இறைச்சி விற்பனை கடைகளில் பெருமளவில் விலை கணிசமாக குறைந்து உள்ளது, அசைவ பிரியர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.