விவசாயிகளுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் காலநிலை அறிவிப்பு செயலி
தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் பயிர் ரகங்களுக்கு ஏற்ப காலநிலை முன்னறிவிப்பு வழங்க, பிரத்யேக செயலி விரைவில் அறிமுகமாகிறது;
வேளாண் பல்கலை சார்பில், வாரந்தோறும் இரண்டு முறை காலநிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும்.
இதில், கடந்த வாரம் மற்றும் எதிர்வரும் வாரத்திற்கான வெப்பநிலை, மழை வாய்ப்பு, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம், காற்றின் திசை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இருக்கும்.
ஆனால், பொதுவானதாக இருப்பதால், விவசாயிகளின் பயிர் ரகங்களுக்கு ஏற்ப, தனிப்பட்ட ஆலோசனை கிடைப்பதில் சிக்கல்கள் இருந்தன.
இந்நிலையில், வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து, ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் அனைத்து பயிர்கள் சார்ந்த டேட்டாக்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் கிராமங்கள் அளவில், விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு ஏற்ப பிரத்யேக காலநிலை முன்னறிவிப்பு தகவல் அளிக்கப்படும். ஒரு மொபைல் எண்ணில் இருந்து, ஒரு பயிருக்கு மட்டுமே பதிவு செய்துகொள்ள முடியும்.
விவசாயிகள் தங்கள் மொபைல் எண், பயிர், பயிரின் ரகம், விதைப்பு நேரம் நாள் போன்ற தகவல்களை கொடுத்து, பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிர்களுக்கு ஏற்றவாறு முன்னறிவிப்பு, வாரம் இருமுறை அனுப்ப இயலும்.
பெரிய அளவில் காலநிலை பாதிப்புகள் இருந்தாலும், தானியங்கி தொழில்நுட்ப முறையில் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நடப்பாண்டில், 8 லட்சம் விவசாயிகள் இதில் இணைக்கப்படவுள்ளனர். தற்போது வரை, ஒரு லட்சம் விவசாயிகள் இணைந்து, ஆய்வு முறையில் காலநிலை முன்னறிவிப்பு அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்