கொரோனா வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: கோவை மாநகராட்சி எச்சரிக்கை!
கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.;
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதே நேரம், படிப்படியாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. கோவை மாநகராட்சி பகுதியில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பதாகவும், உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாகவும், சமூக வலைதங்கள் மூலம் வதந்திகள் உலா வருகின்றன. இதை நம்பி பொதுமக்களில் சிலர் அச்சத்துக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், சமூகவலைதளங்கள் மூலம் கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நஞ்சுண்டாபுரத்தில் கடந்த 10 நாட்களில் 56 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, வீடுவீடாக மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.