கோவையில் 85 ஆயிரம் புதுவாக்காளர்கள் சேர்ப்பு

கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.;

Update: 2024-01-26 15:59 GMT

பைல் படம்

கோவை மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் புதிததாக 85 ஆயிரம் புதுவாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதேபோல் 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 950 வாக்காளர்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 538 பெண் வாக்காளர்கள், 124 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 62 ஆயிரத்து 612 வாக்காளர்களுடன் கவுண்டம்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய தொகுதியாக உள்ளது. தமிழகத்திலேயே 2-வது பெரிய தொகுதியாகவும் இந்த தொகுதி உள்ளது.

மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 503 வாக்காளர்களுடன் வால்பாறை தொகுதி சிறிய தொகுதியாக உள்ளது. இங்கு 93 ஆயிரத்து 443 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 38 பெண் வாக்காளர்கள், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

கோவை வடக்கு தொகுதியில் மட்டும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இங்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 865 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 168 பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். 697 ஆண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். மற்ற 9 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களே அதிகம்.

கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின் கடந்த டிசம்பர் 9 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் மூலம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

40 ஆயிரத்து 469 ஆண் வாக்காளர்கள், 45 ஆயிரத்து 159 பெண் வாக்காளர்கள், 52 மூன்றாம் பாலினத்தவர்கள் என 85 ஆயிரத்து 680 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் 27 ஆயிரத்து 333 ஆண் வாக்காளர்கள், 25 ஆயிரத்து 731 பெண் வாக்காளர்கள் 26 மூன்றாம் பாலினத்தவர்கள் என 53 ஆயிரத்து 90 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கு கோவை தொகுதியில் 2,048 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் கோவை தெற்கு, கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது அப்போதிருந்த வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப 2,045 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தற்போது 20.83 லட்சமாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வாக்குச்சாவடி எண்ணிக்கையும் 2,048 என கூடுதலாக்கப்பட்டுள்ளது. இதில் சூலூர் தொகுதியில் 329, கவுண்டம்பாளையம் 435, கோவை வடக்கு 298, கோவை தெற்கு 251, சிங்காநல்லூர் 323, பல்லடம் 412 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேர்தல்பிரிவினர் கூறுகையில், வாக்குச் சாவடிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.

தேர்தல் தேதி அறிவித்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து தேவையான வசதிகள் இருக்கிறதா என பார்வையிட்டு அவற்றினை உறுதி செய்வார்கள் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News