கோவை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த பயணிகள்: ஒருவர் கைது
ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 11 பயணிகளிடமிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது;
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற பிற மாநிலங்களுக்கும், சென்னைக்கும் தினசரி விமானங்கள் இயக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்தும் விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை அதிகாரிகள் கண்காணித்து நகைகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வளைகுடா நாடான ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் அரேபியா விமானம் தினசரி இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கோவைக்கு வரும் பயணிகள் சிலர் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவதாக உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஷார்ஜாவில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த 11 பயணிகள் தங்களது பேண்ட் பைகள், மலக்குடல், காலணிகள் மற்றும் ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 11 பயணிகளிடம் இருந்து மொத்தம் 6.62 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.8 கோடி ஆகும்.
இந்த சோதனையில் அரை கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளை கடத்தி வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த அர்ஜூன் (43) என்பவரை மட்டும் அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து மற்ற பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.