கோவை மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு

கோவை நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,724 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-14 05:44 GMT

நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசமாக பேசி முடித்து கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) உள்ளது.

தேசிய மக்கள் மன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்று கொள்ளலாம்.

சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்று கொள்ளலாம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. இருதரப்பினருக்கும் வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது.

இந்த நிலையில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழி காட்டுதலின்படி கோவை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமையில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் கோவை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் கோவை மட்டுமின்றி மேட்டுப் பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, அன்னூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 25 அமர்வுகள் மூலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய வாகன விபத்து வழக்குகள், இதர சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்கு உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் மொத்தம் 3,724 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.22 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரத்து 893 அளவுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு மாவட்ட செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே.எஸ்.எஸ்.சிவா செய்து இருந்தார்.

Tags:    

Similar News