கோவையில் 15 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

மதுரையிலிருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட 15 டன் ரேஷன் அரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-04-07 06:55 GMT
கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

மதுரையிலிரந்து கோயம்புத்தூருக்கு லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் கடைகளில் அரசு இலவசமாக விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியை சிலர் சட்டவிரோதமாக பதுக்கிவைத்துள்ளதாகவும், இதனை கோயம்புத்தூரிலிருந்து கேரளாவுக்கு கடத்திச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த கடத்தலை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இயக்குனர் அருண் உத்தரவின்பேரில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆலோசனையின்பேரில், துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் மேனகா, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று காலை செட்டிப்பாளையம் ரோடு சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையிலிருந்து கோயம்புத்தூரை நோக்கி லாரி வந்துகொண்டிருந்தது. இதனை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் 300 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் லாரி ஓட்டுநரான சிவகங்கையை சேர்ந்த முனியாண்டி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மதுரையை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் இந்த கடத்தல் அரிசியை கோவைக்கு கொண்டு செல்லுமாறும், கோவையில் ஒரு நபரை தொடர்பு கொண்டு ரேஷன் அரிசியை ஒப்படைக்குமாறும் தெரிவித்ததால் கடத்தி வந்ததாக ஓட்டுநர் முனியாண்டி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கோவையில் கடதலில் ஈடுபடும் நபர் குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கைதான முனியாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News