உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கை கோர்க்க தேமுதிக முடிவு
உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தேமுதிக திட்டமிட்டுள்ளது.;
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தேமுதிக, தினகரன் கட்சியான அமமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆனால் தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக சார்பில் சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .
அப்போது விஜயகாந்தின் உடல்நிலை பற்றி கேட்டறிந்த ஸ்டாலின் நேரில் வந்து அவரை சந்திப்பதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை நேரில் சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரண உதவியை விஜயகாந்த் வழங்கினார்.
இதன் மூலம் திமுக- தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே சுமூகமான உறவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக- வுடன் கூட்டணி அமைத்து களம் இறங்க தேமுதிக திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.