தமிழகத்தில் இனி வியாழன் தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகத்தில் இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை வீடு தேடி சென்று செலுத்தும் திட்டத்தை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்உ தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 92522 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 4.42 லட்சம் பேர் தகுதி உடையவர்கள். ஜனவரி இறுதிக்குள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இனி பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 600 இடங்களிலும், சென்னையில் 160 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். கொரொனா பாதிப்பு கடந்த வாரத்தில், நாள் ஒன்றிற்கு 2000 அளவிற்கு உயர்ந்து இருந்தது. நேற்று கொரொனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 500 அளவிற்கு குறைந்துள்ளது.
மருத்துவ கலந்தாயவு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 41 ஆயிரம் பேருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, பொது சுகாதார விதிகள் அடிப்படையில்தான் திரையரங்கு உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரும் பொது தடுப்பூசி கட்டாயம் என்று கூறுவதாக விளக்ம் அளித்தார்.
பின்னர், சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள சமூகநலக்கூடத்தில், சென்னை மாநகராட்சி சார்பில், ஸ்கீரினிங் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுகாதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.