செல்போன் பேசியபடி மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
சென்னையில், மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து, விமான நிலைய ஊழியரின் மகன் உயிரிழந்தார்.;
சென்னை விமான நிலைய வளாகத்தில் ஊழியா்கள் குடியிருப்பு உள்ளது. அதில் வசிப்பவா் விஜயகுமாா். இவா் சென்னை விமான நிலையத்தில் ஹவுஸ்கீப்பிங் பிரிவில் பணியாற்றுகிறாா். விஜயகுமாரின் மகன் நாகராஜ் (வயது-23). இவா், மீனம்பாக்கத்தில் உள்ள தனியாா் செல்போன் ஷோரூமில் பணியாற்றி வந்தாா்.
நாகராஜ், விமான நிலைய ஊழியா் குடியிருப்பு மொட்டை மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தாா். அப்போது 2 வது மொட்டை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா். உடனடியாக அவரை பல்லாவரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நாகராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து, நாகராஜ் உடலை, தந்தை விஜயகுமாா் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டாா். அதோடு இறுதி சடங்குகள் செய்ய தயாரானாா்கள். இந்நிலையில் சென்னை விமான நிலைய போலீசுக்கு இதுபற்றிய தகவல் கிடைத்தது. உடனடியாக விமான நிலைய போலீசாா் விரைந்து வந்து, நாகராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விசாரணை நடத்துகின்றனா்.