தடுப்பூசி செலுத்தாத மாணவர்களை கல்லூரி வகுப்புகளுக்கு அனுமதிக்கக்கூடாது

18 வயது பூர்த்தியடைந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-12-11 01:45 GMT

அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில், சென்னையில் உள்ள கல்வி நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவன நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பல்கலைக்கழக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் கல்லூரிகளில் கொரோன தொற்று ஏற்படுவதை தடுக்கவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,

கொரோனா பாதித்த அண்ணாபல்கலைகழக மாணவர்கள் ஒன்பது பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் , அவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்றார்.

இந்நிலையில் கொரோனாவால் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க, 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கல்லூரி வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் வழியாக உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

மேலும் கல்லூரிகளில் கலைநிகழ்ச்சி அல்லது மாணவர்கள் கூடும் விழாக்களுக்கு அனுமதி இல்லை எனவும், பட்டமளிப்பு போன்ற அவசியமான நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படும் எனறார். அதேபோல், கல்லூரிகளில் உணவருந்த ஒரே நேரத்தில் மாணவர்களை அனுமதிக்க கூடாது தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அமைச்சர் சுப்ரமணியன், வகுப்பறையில் கூட முகக்கவசம் மற்றும் இடைவெளி அவசியம் என்று கூறினார்.

அதேப்போல் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தவர்களில், இதுவரை 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அமைச்சர், அந்த 16 பேரில் யாருக்கும் ஓமிக்கிரான் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News