பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சரத்குமார் வலியுறுத்தல்
பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கே.கே. நகரில் இயங்கி வரும் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது.
கல்வி நிறுவனத்தில் இத்தகைய அவல நிலை ஏற்படுகின்றது என்று சொன்னால், மாணவர்களின் எதிர்கால கனவு சிதைந்துவிடாதா? ஒருசில கயவர்களின் அட்டூழியத்தால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் இச்சம்பவம் தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளது என்பதால் உன்னத பணி செய்யும் ஆசிரியர்களின் வேதனையையும் நான் அறிகிறேன்.
பெற்றோர்களும், மாணவர்களும் கல்வி நிலையங்களில் நடந்தேறும் குற்றங்களை தைரியமாக, வெளிப்படையாக தெரிவிக்கும் நிலைக்கு வர வேண்டும். தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுவார்கள் என தனியார் பள்ளிகள் மிரட்டல் பிம்பத்தை வைத்துள்ளனர்.
அந்த மிரட்டல் பிம்பத்தை கிழித்திட குற்றங்களை எடுத்துச் சொல்ல துணிச்சல் வர வேண்டும். பெற்றோர்களும், மாணவர்களும் புகார்களை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடிய சூழலை தமிழக அரசு உறுதி செய்வதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்காதவண்ணம் பாதுகாப்பான முறையில் கல்வியை தொடர வழிவகுக்க வேண்டும்.
கொரோனா சமயத்தில் எவ்வளவோ நெருக்கடிகள், எத்தனையோ கஷ்டங்கள், அத்தனையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆண்ட்ராய்டு அலைபேசி, லேப்டாப், இணையதள வசதி, கல்விக்கட்டணம் என தங்கள் சக்திக்கு மீறி அனைத்து படிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெற்றோர்கள் மன உளைச்சலில் உழலச் செய்யக்கூடாது.
நெஞ்சு பொறுக்காத இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் மீது தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி கயவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமுதாயத்தை சார்ந்திருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.