விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் இன்று சென்னையில் நடந்தது.இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி.சம்பத், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் : தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகளில் வாரக்கணக்காக தண்ணீர் தேங்கி மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
சுமார் 5 லட்சம் ஏக்கரில் வேளாண்மை பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகினர். தொடர்ந்து பெய்த மழையால் எவ்வித வேலைவாய்ப்புமின்றி வருமானம் இல்லாமல் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 5ம் தேதி முதல் 11 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருக்கும் போராட்டம் நடத்திட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை சந்திக்காமல் புறக்கணிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கண்டனம் .உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில் கட்சி அணிகள் முழுமையாக கலந்து கொள்வார்கள் இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.