இரவில் திருடன்; பகலில் வியாபாரி: பலே ஆசாமி கைது
சினிமா பாணியில், இரவில் இளநீர் குலைகளை திருடி, காலையில் வியாபாரியாக வலம் வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கே.கே.நகர் பகுதியில், 80 அடி சாலை நடைபாதையில் ஏராளமான இளநீர் கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்கு மொத்தமாக, பொள்ளாச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, லாரிகளில் இளநீர் லோடு வந்து இறங்குவது வழக்கம்.அதை தார்ப்பாய் போட்டு மூடிவைத்திருக்கும் கடைக்காரர்கள், மறுநாள் பிரித்துப் விற்பனை செய்வர். இவ்வாறு மூடி வைக்கப்பட்டிருந்த இளநீர் குலைகள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன.
அதே பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இளநீர் கடை நடத்தி வரும் லிங்கம் என்பவரது கடையில் இருந்து, நுாற்றுக்கணக்கான இளநீர்கள் திருடு போயின. இதுகுறித்த புகாரையடுத்து, கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், நள்ளிரவில் ஒருவர் மூன்று சக்கர மிதிவண்டியில் இளநீர் திருடிச் செல்வது தெரிய வந்தது.
இச்சம்பவம், விஜயகாந்தின் கோவில் காளை படத்தில் வரும் காட்சியை போன்று இருந்தது. அப்படத்தில் கவுண்டமணியின் இளநீர் கடையில் இருந்து இளநீர் குலைகளை திருடி, செந்தில் வியாபாரம் செய்வது போல் காட்சியிருக்கும்; இந்த காமெடி காட்சி மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
அதேபோல், திருட்டில் ஈடுபட்டது சாலிகிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த், என்பதும் இளநீர் குலைகளை திருடி, சொந்தமாக இளநீர் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.