தினகரனுக்கு எதிரான ரூ.57.43 கோடி வரி மதிப்பீடு ரத்து: தீர்ப்பாயம் உத்தரவு
டி.டி.வி தினகரனுக்கு எதிரான ரூ. 57.43 கோடி வரி மதிப்பீட்டை வருவாய் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது.;
டி.டி.வி. தினகரன்
1991 - 95ம ஆண்டு வரை வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் வங்கி கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது.
இதையடுத்து மத்திய அமலாக்கத்துறை 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்தனர். அப்போது கணக்கில் வராத வருமானம் 57.43 கோடி வருவாய் என்று வருமான வரித்துறை சார்பில் அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். பல ஆண்டு காலமாக இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வந்தது.
இதற்கிடையே தினகரன் மேல்முறையீடு செய்ததன் பேரில் பழைய மதிப்பீட்டு முறையை ரத்து செய்த வருவாய் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கணக்கில் வராத சொத்து மதிப்பை மீண்டும் மறு மதிப்பீடு செய்ய உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தினகரன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், கணக்கில் வராத சொத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை கூடுதல் நேரம் இல்லாமல் முடிக்குமாறு வருவாய் வரி பிரிவுக்கு உத்தரவிட்டது.
டி.டி.வி. தினகரனின் கணக்கில் வராத வருவாய் 57.43 கோடி என்று வருமான வரி பிரிவு மதிப்பீடு செய்தது. இதனை தொடர்ந்து தினகரன் வருவாய் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். இந்த நிலையில் டி.டி.வி தினகரனுக்கு எதிரான ரூ. 57.43 கோடி வரி மதிப்பீட்டை அதிரடியாக ரத்து செய்து வருவாய் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வருவாய் வரிச் சட்டத்தின் விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட கால எல்லைக்குள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று வருவாய் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.