கனமழையால் சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் பெய்துள்ள கனமழையின் காரணமாக, விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
சென்னையில் பெய்யும் கனமழையால், துபாய், சாா்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் 4 விமானங்களும், சென்னையில் இருந்து துபாய், சாா்ஜா செல்லும் 4 விமானங்களும் என, மொத்தம் 8 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் லண்டன், துபாய், குவைத் உட்பட பகுதிகளுக்கான 10 விமானங்களின் புறப்பாடு தாமதமாகி உள்ளன. எனினும், உள்நாட்டு விமான சேவைகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
சென்னையில் இன்று அதிகாலை 2.15 மணி, 4.25 மணி, காலை 8.15 மணிக்கு துபாயில் இருந்து சென்னைக்கு வரும் 3 விமானங்கள், அதிகாலை 3 மணிக்கு சாா்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு விமானம் ஆகிய 4 வெளிநாட்டு விமானங்களும்; அதைப்போல் சென்னையில் இருந்து துபாய்க்கு அதிகாலை 3.30 மணி, 5.25 மணி, காலை 9.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் 3 விமானங்களும், இன்று அதிகாலை 3.40 மணிக்கு சாா்ஜா புறப்பட்டு செல்லும் ஒரு விமானமும் என மொத்தம் 8 வெளிநாட்டு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இன்று அதிகாலை 00.05 மணிக்கு துபாய் செல்ல வேண்டிய விமானம், அதிகாலை 1.36 மணிக்கும்; அதிகாலை 00.20 மணிக்கு கோலாலம்பூா் செல்ல வேண்டிய விமானம், 00.55 மணிக்கும்; 00.40 மணிக்கு கொழும்பு செல்ல வேண்டிய விமானம் 1.12 மணிக்கும்; 00.40 மணிக்கு ஹாங்காங் செல்லும் விமானம் 2.14 மணிக்கும்; 1.45 மணிக்கு குவைத் செல்லும் விமானம், 2.22 மணிக்கும்; 2.05 மணிக்கு அபுதாபி செல்லும் விமானம், 2.43 மணிக்கும்; 2.50 மணிக்கு குவைத் செல்லும் விமானம், 3.41மணிக்கும்; 2.50 மணிக்கு கொழும்பு செல்லும் விமானம், 4.06 மணிக்கும்; 3.20 மணிக்கு தோகா செல்லும் விமானம், 3.56 மணிக்கும் தாமதமாக புறப்பட்டு சென்றன.
லண்டனில் இருந்து இன்று காலை 5.35 மணிக்கு சென்னை வந்துவிட்டு, காலை 7.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்ல வேண்டிய பிரிடீஷ் ஏா்லைன்ஸ் விமானம், தாமதமாக இன்று பகல் 12 மணிக்கு வந்து பிற்பகல் 2 மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் இன்று அதிகாலையில் வழக்கம்போல் புறப்பட்டு செல்கின்றன. பெங்களூா், அகமதாபாத், ஹுப்லி, இந்தூா், மும்பை, டில்லி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகாலை 3.30 மணியில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.