செவிலியர் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.;
பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறியதாவது;
செவிலியர்களின் நியாயமான போராட்டத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம்.
கொரோனா காலத்தில் செவிலியர்கள் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இன்னும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இவர்களின் பணி நமக்குத் தேவை. கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் முடிந்து விட்டதாக அரசு கருத வேண்டாம். இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தொற்றின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்துள்ளது.ஆதலால் செவிலியர்கள் பணி முடிந்து விட்டது போல் சிதறடிப்பது நியாயமில்லை. இவர்களின் கோரிக்கை நியாயமானது. இவர்களின் சேவை நமக்கு தேவை.
செவிலியர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது நமது கடமை அரசுக்கு பரிந்துரைக்கவே வந்துள்ளேன். ஒரு நல்ல அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமே தவிர இருக்கும் வேலைவாய்ப்புகளை குறைக்க கூடாது.
அரசு இவர்களின் போராட்டத்தை கவனமுடன் அணுகி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் போராட்டத்தை ஒரு சுமூகமாக முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவே வந்துள்ளேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.