"உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்..!
-தமிழக அரசு அறிவிப்பு
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரன் அவர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்றதும், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னது போல தொகுதி பிரச்சனைகளை 100 நாட்களில் நிறைவேற்றிட தனி இலாகா அமைக்கப்படும் என்றும் இதனை நடைமுறைக்கு கொண்டு வர "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்னும் திட்டத்திற்கு இன்று கையெழுத்திட்டார்.
இதைத்தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரன் சதீஷ் நியமனம் செய்யப்பட்டார். மேலும் முதலமைச்சரின் தனிச்செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷில்பா பிரபாகரன் ஏன் தேர்வு?
சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராக இருந்தபோது மாநகராட்சியில் படிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து தன்னைப்போல் நீங்கள் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற விதையை மாணவர்கள் மனதில் விதைத்தார். இதன் காரணமாக நீட் தேர்வில் சென்னை மாநகராட்சி மாணவ மாணவிகள் அதிகளவு சாதனை படைத்தனர். முன்பாக திருநெல்வேலி கலெக்டராக பணியில் சேர்ந்து தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரன் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.