தமிழகத்தில் பொது போக்குவரத்திற்கு அனுமதி? மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் பொது போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக குறையத் தொடங்கியது. இதனால் கடந்த 7ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா நோய் பரவலின் நிலை மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், பொது போக்குவரத்தை அனுமதிக்கலாமா என்பது குறித்தும், பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இருக்கிறதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.