பத்திரப்பதிவுக்கு அலைமோதும் கூட்டம் : அச்சத்தில் அதிகாரிகள்
பத்திரப்பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலமாக பத்திரப்பதிவு பணிகள் செய்யப்படுகிறது. ஊரடங்கால், கடந்த மே 10ல் மூடப்பட்ட இந்த அலுவலகங்கள், கடந்த ஜூன் 7ல் தமிழகத்தில் திறக்கப்பட்டது.
ஒரு அலுவலகத்திற்கு 50 சதவீத 'டோக்கன்' மட்டுமே அனுமதி வழங்கி கொரோனா கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப் பட்டது. ஜூன் 7ல் சார் பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 4,600 பத்திரங்கள் பதிவானது. போக்குவரத்து வசதி இல்லாததே, இதற்கு காரணமாக கூறப்பட்டது.
தளர்வு காரணமாக பத்திரப்பதிவு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஆவண எழுத்தர்களின் கடைகளிலும், சார்பதிவாளர் அலுவலகத்தின் வெளியிலும், காத்திருப்போர் கூட்டம் அதிகரிக்கிறது.
இதை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப கூடுதல் டோக்கன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்