சென்னையில் ரெட் அலர்ட்: விமானங்கள் ரத்து
பலத்த மழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் இன்று இரவில் மதுரை, திருச்சி இடையே இயக்கப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
தமிழ்நாடு முழுவதும் பருவமழை வலுப்பெற்றுள்ளது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி நாளை கடலூா்,ஶ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாளை மாலை வரை இந்த மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் கடந்த சில தினங்களாக பல விமானங்கள் சிறிது நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வந்தன.எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை. ஆனால் இன்று மாலை மற்றும் இரவில் சென்னை விமானநிலையத்தில் மதுரை, திருச்சி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை 4.10 மணிக்கு சென்னை -மதுரைக்கு 40 பயணிகளுடன் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், இரவு 7.55 மணிக்கு சென்னை-திருச்சிக்கு 41 பயணிகளுடன் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் இன்று இரவு 7.30 மணிக்கு மதுரை-சென்னைக்கு 74 பயணிகளுடன் வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், இரவு 10.30 மணிக்கு திருச்சி-சென்னைக்கு 34 பயணிகளுடன் வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான நிறுவனம்,விமானங்கள் ரத்து பற்றிய தகவலை தெரிவித்து,அவா்களுடைய பயண டிக்கெட்களை வேறு தேதிகளுக்கு மாற்றுவது,ரீபண்ட் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிா்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து என்று பயணிகளுக்கு தெரிவித்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை-திருச்சி விமானம்,திருச்சியில் பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து,மறுநாள் அதிகாலை மீண்டும் திருச்சி புறப்பட்டு சென்றது. இதனால் திருச்சியிலிருந்து சென்னை வரவேண்டிய பயணிகள் இரவு முழுவதும் திருச்சி விமானநிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.அ
தைப்போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க,முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய தரப்பில் கூறப்படுகிறது.