இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல்; பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ளது.
மேலும் மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல், சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தல் கட்டணங்களை விதித்தல். அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்திய பிறகு மீன்வர்களின் கருத்துகளைப் பெற்று மீனவர் நலன் காக்கும் வகையிலும் கடல் வளத்தைக் காக்கும் வகையிலும் புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம்.
தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தியக் கடல்சார் மீனவர் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம் என்று அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.