வெள்ள பாதிப்புகளை தொலைபேசியில் பிரதமர் கேட்டறிந்தார்:முதலமைச்சர் தகவல்

பிரதமர் மோடி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்;

Update: 2023-12-24 15:45 GMT

பைல் படம்

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக எக்ஸ் பக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; தென் தமிழகம், சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமரிடம் தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளை விளக்கினேன்.

மாநில அரசு மேற்கொண்டுள்ள மீட்பு, நிவாரண பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன். மழை, வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்குமாறும் பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதியளித்துள்ளார். வெள்ள பாதிப்பு மதிப்பீடு செய்யும் பணிகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேற்கொள்வார் என பிரதமர் கூறியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 3, 4-ம் தேதிகளில் வட தமிழக கடலோர பகுதியை நெருங்கி வந்தது. இதனால் ஏற்பட்ட காற்று, அதிக னமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு சென்றார். அப்போது, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதன்பிறகு, மத்திய குழுவினர் வந்து மழை பாதிப்புகளை பார்வையிட்டு சென்றனர். அப்போது, தற்காலிக சீரமைப்புக்கான நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.12,659 கோடியும் வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் கடந்த 17-ம் தேதி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, நியாய விலை கடைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரொக்கமாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டும் நிவாரணம் கிடைக்காதவர்கள், அரசு அறிவுறுத்தியபடி விண்ணப்பித்து வருகின்றனர்.

Tags:    

Similar News