மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: துவங்கிய 2 நாளில் 13,247 பேர் பயன் - அமைச்சர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் துவக்கப்பட்டு 2 நாளில் 13,247 பேர் பயனடைந்துள்ளாதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு அம்மருத்துவமனைக்கு ரூ. 90லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை மையம் புதுப்பிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துவக்கமாக மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 2010 ஆம் ஆண்டு நற்பணி மன்றமாக துவங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தீவிபத்தில் துரிதமாக செயல்பட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கொரோனா தொற்றின் இரண்டாம் தாக்கத்தை சிறப்பாக கையாண்டு மக்கள் சேவை செய்து வருகிறது திமுக அரசு. தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன் என்றார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கொரோனாவை ஒழிக்கின்ற ஒரே பேராயுதம் தடுப்பூசி தான்அதை அதிக அளவில் பயன்படுத்தியது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தான். இந்த மருத்துவமனையில் நடந்த தீவிபத்தில் சூழலுக்கேற்ப செயல்பட்டு எந்தவொரு பாதிப்பும் இன்றி காப்பாற்றிய அனைவரின் பங்களிப்பும் பெருமைக்குரியது என்றார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு குறைந்தபட்சமாக 90நாட்களாகவது ஆன பின்பு தான் நிதியை அத்தொகுதிக்கு பயன்படுத்தப்படும். ஆனால் இங்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் 90லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது பாராட்டுதளுக்கு உரியது.
தமிழகத்திற்கு ஆக்ஸிசன் 450மெட்ரிக் டன் தேவை ஆனால் 1000மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளது என்ற அவர், தடுப்பூசி தட்டுப்பாட்டையும் கவலைப்படாமல் தன்னுடைய தொகுதிக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுதளுக்குரியது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மொத்தம் 2லட்சத்து 34ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 1லட்சத்து 20ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டுவிட்டால் இந்தியாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிதான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தொகுதியாகும் என்றார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவுள்ள மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் அதிகப்படியாக வழங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என கூறினார்.
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் சிறப்பான ஒன்றாகும்.அத்திட்டத்தின் மூலமாக 38மாவட்டத்தில் நீரிழிவு நோயாளிகள் 2மாதத்திற்கு தேவையான மருந்துகளை 3722 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 5816 ரத்த அழுத்தத்திற்கான மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
2768பேருக்கு இரண்டும் நோயிற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. 426பேருக்கு பலேட்டிவ்கேர் (நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்கள்) மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
454பேருக்கு பிசியோ தெரபி கொடுக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு தானாக டயாலிஸிஸ் செய்யும் உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 13,247 பேர் இரண்டு நாட்களில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலமாக இந்த ஆண்டு இறுத்திக்குள் 1கோடி பேர் பயனடைவார்கள் என அவர் தெரிவித்தார்.