5 மாவட்டங்களில் தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ளது: சுகாதார செயலர் தகவல்
தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் விகிதம் குறைவாக உள்ளது என்று சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விகிதம் குறைவாக உள்ளது எனவும், கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது எனவும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,இன்று தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சம் தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்பு, காவல்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து இந்த தடுப்பூசி மையங்களை நடத்துகிறது. தென் மாவட்டங்கள் அனைத்திலும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மொத்தமாக 2.93 கோடி மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 80 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தமக 3.74 கோடி தடுப்பூசி நேற்று இரவு வரை போடப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 22 லட்சம் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 48 % பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 13% பேர் இரண்டாம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிப்பெண்களுக்கு 4.24 லட்சம் தடுப்பூசியும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3.33 லட்சம் தடுப்பூசிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3. 72 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக 9.56 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் அதிகமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் குறைவான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது. மேலும், தேவைக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியர்கள் தடுப்புசி மையத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் நானும் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன் என்றார்.