சென்னை: கொரோனா பாதிப்பவருக்கு 14 நாள்கள் மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை
சென்னையில் இனி நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் 14 நாள் மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை பெற முடியும்
சென்னையில் இனி யாருக்காவது கொரோனா கண்டறியப்பட்டால் 14 நாள்கள் மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை சிகிச்சை பெற முடியும் என்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இதில், சென்னையில் மட்டும் 180 முதல் 220 வரை தினசரி பாதிப்பு பதிவாகிறது. சென்னையில் தற்போது வரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8467 பேர் உயிரிழந்து விட்டனர். தற்போது 2 ஆயிரத்து 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சுகாதார அலுவலர்களுடன் ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆலோசனை நடத்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கொரோனா பாதித்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தக் கூடாது. உடனே மருத்துவமனையில் சேர வேண்டும்.14 நாட்கள் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். கட்டாயம் வீட்டு தனிமை வேண்டுவோரின் வீடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். தனியறை, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்த்து அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள். அவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால்,ள்உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.