18 வயதானவர்கள் தடுப்பூசி போட முடியுமா? தொடரும் தொழில் நுட்பச்சிக்கல்
பதிவு செய்வதற்கான இணையதளத்தில் நிலவும் சிக்கலால், திட்டமிட்டபடி நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதில் சிக்கல் நிலவுகிறது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுபுறம், கோவீஷில்டு, கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளை போடும்பணி நடைபெற்று வருகிறது.
முதலில், முன்களப் பணியாளர்களுக்கும், அடுத்து நாற்பத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா வேகமாக பரவுவதால், மே ஒன்றாம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. எனினும், இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. www.cowin.gov.in என்ற இணையதளத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர் பதிவு செய்ய முடியவில்லை. www.cowin.gov.in இணையதளத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர் மட்டுமே பதிவு செய்ய முடிகிறது.
அதேபோல், நேரடியாக தடுப்பூசி மையம் சென்று விண்ணப்பித்து தடுப்பூசி செலுத்தும் முறை, 18+ வயது பிரிவினருக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.