வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் 2,000 அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி அதிரடி

விதிகளை மீறி வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் மொத்தம் ரூ.58,000 வசூல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

Update: 2021-06-06 04:29 GMT

சென்னை: கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டவா்களில், வெளியே சுற்றிய நபர்களிடம் இருந்து ரூ.58,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  கொரோனா தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தவா்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால், அவா்களிடமிருந்து முதன்முறை ரூ.2,000 அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியில் வருவோரை, சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பான புகாா்கள் இருப்பின், சென்னை மாநகராட்சிக்கு 044 2538 4520 என்னும் எண் வாயிலாக புகாா் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மாநகராட்சியை பொறுத்தவரை இதுவரை பெறப்பட்ட 120 புகாா்கள் மீது வருவாய்த்துறை அலுவலா்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 87 புகாா்களில் விதிமீறல் இல்லை எனவும், நான்கு நோயாளிகள் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் எனவும் தெரியவந்துள்ளது.மீதமுள்ள 29 பேரிடமிருந்து தலா ரூ.2,000 வீதம் ரூ.58,000 அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவா்கள் இனிவரும் நாள்களில் வெளியே வரக்கூடாது.மீறினால் கொரோனா பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News