சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

அம்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-02-11 10:00 GMT

சாலை  விதிகள் குறித்து சிறப்பாக பேசிய மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி! வட்டார போக்குவரத்து அலுவலர்,மோட்டார் வாகன ஆய்வாளர், பள்ளி முதல்வர் கலந்து கொண்டனர்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை உள்ள 31 நாட்கள் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கடந்த 15 ஆம் தேதி முதல் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம், ஓ.டி பேருந்து நிலையம் மற்றும் அம்பத்தூரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று புதூரில் அமைந்துள்ள சேது பாஸ்கரா நிறைநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக் குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ரமேஷ் மற்றும் சேது பாஸ்கரா பள்ளி முதல்வர் செல்வகுமார் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக் குமார் கூறுகையில், மாணவ மாணவிகள் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முன்போ அல்லது 18 வயதுக்கு பூர்த்தி ஆவதற்கு முன்பு இருசக்கர வாகனத்தை இயக்கக் கூடாது என்றும், அவ்வாறு இயக்கினால் விதிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் சாலையில் எவ்வாறு பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளையும் வழங்கினார். சாலை விதிகள்  குறித்து சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News