தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தகவல்

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்.;

Update: 2021-10-11 11:49 GMT

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து போக்குவரத்து துறை செயலாளர் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்து மண்டல மேலாண் இயக்குனர், காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்:-

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 1, 2,3 தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2100 பேருந்துகளுடன் 3506 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து சென்னையிலிருந்து 9 ஆயிரத்து 806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 540 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக 5, 6, 7, 8 தேதி வரையில் தினசரி இயங்கக் கூடிய 2100 பேர் பேருந்துகளுடன் 4,319 சிறப்பு பேருந்துகளும் ஏனைய முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,1719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கு வசதியாக மாதவரம் பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு என ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி நசரத்பேட்டை வழியாக வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும். பொதுமக்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 கவுண்டர்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்கள் என மொத்தம் 12 கவுண்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் இதனை தடுக்க பொதுமக்கள் புகார் அளிக்க கூடிய வகையில் toll-free 1800 425 6151, 044 24749002 எண்களும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News