அச்சிறுப்பாக்கம்: கல்லூரி பேராசிரியர் வீட்டில் 110 சவரன் நகை திருட்டு
அச்சிறுப்பாக்கத்தில், வீட்டு பூட்டை உடைத்து, 110 சவரன் நகை, 80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம், ஒத்தவாடை இரண்டாவது தெருவில் வசிப்பவர் கார்த்திகேயன். இவர் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர். இவர், நேற்று மாலை செய்யூர் அருகே உள்ள விளாங்காடு கிராமத்தில் உள்ள தனது தந்தையாரை பார்க்க சென்றுள்ளார்.
இன்று காலை ஊர் திரும்பிய அவர், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புறமாக கதவை உடைத்து, பீரோவில் இருந்த 110 சவரன் நகை மற்றும் ரூபாய் 80 ஆயிரத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த திருட்டு குறித்து, கைரேகை நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.