திறப்பு விழாவிற்கு முன்பே உதிரும் தொகுப்பு வீடுகளின் சுவர்கள்: பொதுமக்கள் அதிர்ச்சி
மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற இருந்தது.;
மதுராந்தகம் அருகே தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. திறப்பு விழாவுக்கு முன்னதாகவே அதன் சிமெண்டு பூச்சுகள் கைகளால் தொட்டால் மணலாக பெயர்ந்து விழுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மதுராந்தகம் அருகே உள்ள கொடூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில் இருளர்களுக்கு மத்திய மாநில அரசு நிதியின் கீழ் 30 வீடுகளும், தமிழ்நாடு அரசு மற்றும் மொபிஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பாக திருநங்கைகளுக்கு 50 வீடுகளும் கட்டப்பட்டு உள்ளன. இதன் மதிப்பீடு ரூ.5 கோடியே 24 லட்சத்து 96 ஆயிரம் ஆகும்.
இந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற இருந்தது. ஆனால் இந்த வீடுகள் தரமற்றதாகவும் கை வைத்தாலே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தொகுப்பு வீடுகளை சமீபத்தில் ஆய்வு செய்தனர். மேலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த இடத்தில் பேட்ச் ஒர்க் மட்டும் செய்ததாக கூறப்படுகிறது. அதுவும் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகின்றன.
இதற்கிடையே இந்த தரமற்ற வீடுகள் தொடர்பாக வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் சுவற்றில் ஒருவர் கை வைத்து தேய்க்கும் போது சிமெண்டுகள் அப்படியே மணலாக திரிந்து விழுகின்றன. இதேபோல் பல வீடுகள் திறப்பு விழாவுக்கு முன்னதாகவே பழுதடைந்து பழைய வீடுகள் போல் காட்சி அளிக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
தொகுப்பு வீடுகள் மீண்டும் சரிபார்த்து பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்து இருப்பதாக தெரிகிறது. தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தி தொகுப்பு வீடுகளை கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக பயனாளியான அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கூறும்போது, திருநங்கைகளுக்கான தொகுப்பு வீடுகளை தரமற்ற முறையில் கட்டி உள்ளனர். தொட்டாலே சிமெண்டுகள் பெயர்ந்து விழுகின்றன. ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளித்தோம். தற்போது மோசமான நிலையில் கட்டப்பட்ட வீட்டை சரி செய்யும் பணி மட்டுமே நடைபெறுகிறது. அதிகாரிகள் நேரடியாக முழு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தரமான புதிய வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.