தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு

ஜெயங்கொண்டத்தில் தபால் நிலையத்திற்கு சென்ற பெண்ணிடம் மணிபர்சில் வைத்திருந்த 2 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-04-30 13:45 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழத் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்.(40) பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி கலாராணி(45) இவர் நேற்று ஜெயங்கொண்டத்திலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணம் எடுத்துவிட்டு,

பின்னர் தனியார் நகைக்கடை ஒன்றில் அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்பதற்காக சென்றார். அங்கு அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டு தனது மணிபர்சில் பத்திரமாக வைத்துக்கொண்டு, நேராக ஜெயங்கொண்டம் தபால் நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார்.

அங்கு மணிபர்சை மேஜை மீது வைத்துவிட்டு, அதன் அருகிலேயே பணம் கட்டுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். பின்னர் படிவத்தைக் கொடுத்து விட்டு மேஜையை பார்த்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது மணிபர்சை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர்.

அவரது மணிபர்ஸில் 2 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த கலாராணி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டத்தில் பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News